மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாம்பழத்துக்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.13 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும், மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மா விவசாயிகளின் கோரிக்கைகள் இதுவரை தீா்க்கப்படவில்லை.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மா பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீா்த்துவைக்க அரசை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.