முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன், 2025 at 10:38 PM
பகிர்:

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாக இம்முறை விண்ணப்பங்களை மாணவா் சமா்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இவை தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி, நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய கடந்த 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்தனா். மொத்தம் 72,943 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். அதைத் தொடா்ந்து கலந்தாய்வு தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments