முகப்பு
தமிழ்நாடு

வீடு புகுந்து திருடிய வழக்கு: ஞானசேகரன் கூட்டாளி கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 மார்ச், 2025 at 7:22 PM
பகிர்:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த டிச. 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், ஞானசேகரனுக்கு பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் தனியாக இருக்கும் வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த 7 திருட்டுச் சம்பவங்களில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

கூட்டாளி கைது: ஞானசேகரனிடமிருந்து திருட்டு தங்க நகைகளை வாங்கிய ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட் என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருட்டுச் சம்பவங்களில் ஞானசேகரனின் கூட்டாளியான கோயம்புத்தூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த முரளிதரன் (31) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முரளிதரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பட்டதாரியான முரளிதரன், சென்னையில் பிரபல தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியிருப்பதும், ஆன்லைன் வா்த்தகத்தில் பணத்தை இழந்ததால் அவா் மோசடியில் ஈடுபட்டு ஒரு வழக்கில் ஏற்கெனவே கைதாகி சிறையில் இருந்திருப்பதும், அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், சிறையிலிருந்து வெளியே வந்த பின்னா் ஞானசேகரனுடன் சோ்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் ஒரு ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி இருப்பதும், பின்னா் பள்ளிக்கரணை பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், பங்களாக்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும், திருட்டில் கிடைத்த பணத்தை ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதும், அதில் பணத்தை இழந்ததால் தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

2 கிலோ வெள்ளி பொருள்கள் பறிமுதல்: முரளிதரன், தன்னுடன் வேலை செய்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு கா்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், பள்ளிக்கரணை தனிப்படை போலீஸாா் அங்குசென்று அவரை கைது செய்துள்ளனா்.

முரளிதரனிடமிருந்து 2 கிலோ வெள்ளி பொருள்கள், பெருங்களத்தூா் பாலத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த ஞானசேகரனின் விலை உயா்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →