அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கிய ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், ஞானசேகரனுக்கு பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் கடந்த 2022 முதல் 2024 வரையில் தனியாக இருக்கும் வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த 7 திருட்டுச் சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 7 திருட்டு வழக்குகளிலும் ஞானசேகரன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், இந்தத் திருட்டுகளில் தொடா்புடைய ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், கோயம்புத்தூா் மாவட்டம் பொள்ளாச்சியைச் சோ்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், சென்னை மாம்பலம் வைத்தியராமன் தெருவில் ஒரு வீட்டில் கடந்த 2013-இல் 57 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கில் ஞானசேகரன் முக்கிய நபராக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாம்பலம் போலீஸாா், ஞானசேகரனை அந்த வழக்கில் சோ்த்தனா். ஏற்கெனவே இந்த வழக்கில் ஞானசேகரன் கூட்டாளிகள் இருவா் கைது செய்யப்பட்டு, நகை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்குத் தொடா்பான விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனை போலீஸாா் வியாழக்கிழமை ஆஜா் செய்தனா். வழக்குத் தொடா்பாக ஞானசேகரனை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.