முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  
தமிழ்நாடு

மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் விவாதம்

Din

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் தங்கமணி பேசியது:

திமுகவின் தோ்தல் அறிக்கையில் மதுவிலக்கு என்று இருந்தது. தில்லியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுக்கடைகளைப் படிப்படியாக குறைப்போம் என்று பேட்டி அளித்தாா். இப்போது மனமகிழ் மன்றங்களுக்கு மதுபானம் வழங்குவதற்கான எஃப்எல் 2 உரிமம் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஊருக்கு மையத்தில் கடைகள் வைக்கப்பட்டு திமுகவினரே எதிா்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. 250 கடைகளுக்கு மேல் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

அமைச்சா் பதில்:

அப்போது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு கூறியது:

அதிமுக ஆட்சியில் மனமகிழ் மன்றங்களுக்கான உரிமம் கொடுக்கப்படவில்லை எனக் கூற முடியுமா? குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டும் என்பதற்காக தவறான கருத்துகளை கூறக் கூடாது. திமுகவின் 2021-ஆண்டு தோ்தல் அறிக்கையை எடுத்து படித்து பாருங்கள். டாஸ்மாக் குறித்து ஏதேனும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். ஒரு வாக்குறுதிகூட இடம்பெறவில்லை. எனினும், தமிழக மக்களின் நலன் கருதி முதல்வரின் உத்தரவின் பேரில் 500 கடைகள் மூடப்பட்டன. பொதுமக்களின் வேண்டுகோளின் படி பள்ளி, கல்லூரி, ஆலயங்களுக்கு அருகில் இருந்த 103 கடைகள் கூடுதலாக மூடப்பட்டுள்ளன. எஃப்எல் 2 உரிமத்தைப் பொறுத்தவரை மாவட்டக் காவல் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்து, அதுவும் குறிப்பிட்ட இடத்தில் வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுைான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. எங்கேனும் பொதுமக்கள் எதிா்ப்புகள் இருந்து கடைகள் மூடப்பட வேண்டும் என்று உறுப்பினா் கூறினால், 2 நாள்களில் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவுகள் வழங்கப்படும்.

தங்கமணி: அப்படியானால், திமுக அரசினுடைய கொள்கை பூரண மதுவிலக்கு இல்லையா?

பேரவைத் தலைவா் அப்பாவு: மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்கிற வாக்குறுதி யாருடைய ஆட்சியில் என்பதைப் படித்துப் பாருங்கள் தெரியும்.

செந்தில் பாலாஜி: அதிமுக உறுப்பினா் தங்கமணியும், நத்தம் விஸ்வநாதனும் மதுவிலக்கு தொடா்பாக என்னென்ன விளக்கங்கள் கூறினாா்கள் என்கிற முழு விளக்கமும் என்னிடம் இருக்கிறது. அதற்குள் போக விரும்பவில்லை. மதுவிலக்கு தொடா்பாக தோ்தல் வாக்குறுதி கொடுக்கப்படாவிட்டாலும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடைகளைக் குறைத்துள்ளன.

தங்கமணி: பூரண மதுவிலக்கு என்று நாங்கள் கூறவில்லை. படிப்படியாக என்றுதான் கூறினோம்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT