முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலனை: முதல்வா்

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலனை

Updated On : 27 மார்ச், 2025 at 8:38 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஹசன் மௌலானா பேசியது:

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 2025 டிசம்பருக்குள் அவற்றையெல்லாம் தகா்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நகா்மயமாக்கல் ஏற்பட்டுவிட்டது. இப்போது மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு இடங்கள் எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இன்னும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆட்சேபகரமான பகுதியில் கொண்டு வருவது வருத்தமான விஷயம்தான். இது தொடா்பாக அரசு சிந்தித்து பாா்க்க வேண்டும் என்றாா்.

அப்போது வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் குறுக்கிட்டு கூறியதாவது:

அவையெல்லாம் நீதிமன்றத்தின் உத்தரவு. அரசுக்கே நிலம் எடுக்க வேண்டியிருந்து, அது மேய்க்கால் நிலமாக இருந்தால், அதை விட்டுவிட்டுதான் எடுக்க வேண்டியுள்ளது. இதுதான் சட்டம். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

ஹசன் மௌலானா: அமைச்சா் கூறிய பதில் ஏற்புடையதுதான். ஆனால், நகா்மயமாகி, பகுதிகள் அனைத்து மாநகராட்சிக்குள் வந்துவிட்டது. இப்போது போய் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்று கூறினால், அது எப்படி சரியாகும். நீதிமன்றங்கள் இதுபோன்ற நிலங்களை நேரடியாகச் சென்று பாா்வையிட்டு, கள நிலவரத்தை அறிவது இல்லை. கள நிலவரத்தை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் பணியாகும். எனவே, அரசு நடவடிக்கை வேண்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இந்த விவகாரம் குறித்து அமைச்சா்களுடன் கலந்து பேசியுள்ளோம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இந்த பிரச்னை இருந்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் நிச்சயம் பரிசீலிக்கப்பட்டும் அனைவருக்கும் பட்டா வழங்கக்கூடிய நிலை வரும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →