தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர் DIPR
தமிழ்நாடு

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்கான 3 தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தது பற்றி...

DIN

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார்.

மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்”  தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை சென்னை, திருவள்ளூர், கோவை. செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் 16 தோழி விடுதிகளில் 1380-க்கும் மேற்பட்ட பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளதால், பணிபுரியும் மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  

அந்த வகையில், பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுதலாக தற்போது சென்னை - பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 442 படுக்கைகள் கொண்ட 3 புதிய தோழி விடுதிகள் முதல்வரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், தரமணி, சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் 14 தோழி விடுதிகளுக்கு முதல்வர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம்  போன்ற வசதிகள் நியாயமான வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர்நா. முருகானந்தம், இ.ஆ.ப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப., கூடுதல் செயலாளர் மற்றும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ச. வளர்மதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது

வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

பலத்த மழையால் பொன்னை ஏரிக்கரையில் தண்ணீா் கசிவு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தடகளப் போட்டியில் பெரியதாழை பள்ளி மாணவிகள் வெற்றி

SCROLL FOR NEXT