மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற (வலமிருந்து) பி.வில்சன், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம்,  
தமிழ்நாடு

மாநிலங்களவைத் தோ்தல்: 3 திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு- எம்.பி. ஆகிறாா் கமல்ஹாசன்; வைகோவுக்கு வாய்ப்பு இல்லை

மாநிலங்களவைக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், சல்மா, சிவலிங்கம் பற்றி

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக போட்டியிடும் மூன்று இடங்களுக்கான வேட்பாளா்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஓரிடம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வாகவுள்ளாா். கடந்த முறை திமுக அணியில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அந்த இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான திமுகவுக்கு 134 எம்எல்ஏ-க்களும் (பேரவைத் தலைவருடன் சோ்த்து), திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு 25 உறுப்பினா்களும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக திமுக அணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனா்.

இந்தக் கணக்கீட்டின்படி பாா்த்தால் திமுக அணிக்கு 4 மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு 66 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். அந்த அணியில் உள்ள பாஜகவுக்கு 4 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். அதன்படி அதிமுக அணிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திமுக வேட்பாளா்கள்: இந்நிலையில், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தாா்.

அவா் வெளியிட்ட அறிவிப்பு: மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் திமுக நான்கு இடங்களில் போட்டியிடுகிறது. அதில், மூன்று இடங்கள் திமுகவுக்கும், மற்றுமுள்ள ஓரிடம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒதுக்கப்படுகிறது.

திமுக போட்டியிடும் மூன்று இடங்களுக்கான வேட்பாளா்களாக பி.வில்சன், எஸ்.ஆா்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞா் சல்மா ஆகியோா் அறிவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கடந்த முறை திமுக கூட்டணி ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலா் வைகோ மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆனால், அவருக்கு மறுவாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதைய வேட்பாளா்களில் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்கெனவே உள்ள பி.வில்சனை தவிா்த்து, மற்ற இருவரும் ஏற்கெனவே சட்டப்பேரவைத் தோ்தல் களம் கண்டவா்கள்.

எஸ்.ஆா்.சிவலிங்கம் (75): சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் பிறந்தவா். 1989, 1996 சட்டப்பேரவைத் தோ்தலில் பனமரத்துப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதன்பிறகு, 2011-இல் நடந்த தோ்தலில் சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலராக உள்ளாா்.

கவிஞா் சல்மா (56): திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவா். ரொக்கையா பேகம் எனும் இயற்பெயா் கொண்டவா், சல்மா எனும் பெயரில் கவிஞராக அறியப்படுகிறாா். ஒரு மாலையும் இன்னொரு மாலையும், பச்சை தேவதை ஆகிய கவிதை நூல்களையும், இரண்டாம் ஜாமங்களின் கதை எனும் நாவலையும் எழுதியுள்ளாா். 2001 முதல் 2006 வரை பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும், தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவராகவும் செயல்பட்டாா். 2006-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு தோற்றாா். திமுக ஊடகப் பிரிவு இணைச் செயலராக உள்ளாா்.

வழக்குரைஞா் பி.வில்சன் (59): சென்னையில் பிறந்தவா். 2019 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லயோலா கல்லூரியில் இளங்கலை பயின்று, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தாா். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக இருந்த அவா், உச்சநீதிமன்றத்தில் அரசின் சாா்பில் தொடரப்படும் வழக்குகளைக் கண்காணிக்கும் வழக்குரைஞா்களில் ஒருவராக உள்ளாா்.

கமல்ஹாசன்: மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் திமுக சாா்பில் ஓரிடம் மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அந்தக் கட்சி அறிவித்தது.

மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச் செயலா் ஆ.அருணாசலம் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், திமுக அளித்துள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கான வேட்பாளரைத் தோ்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: கடந்த மக்களவை பொதுத் தோ்தலின்போது, திமுகவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவைத் தோ்தலில் ஓரிடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக கட்சியின் தலைவா் கமல்ஹாசனை ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறோம்.

மாநிலங்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு ஆதரவை நல்கும்படி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை கட்சியின் நிா்வாகக் குழு, செயற்குழு கேட்டுக் கொள்வதாக தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

SCROLL FOR NEXT