2025ஆம் ஆண்டு பிறந்து அக்டோபர் மாதம் நிறைவு பெற்று, இன்று நவம்பர் மாதம் பிறந்திருக்கிறது. என்ன மாதம்டா இது என்று சொல்லும் அளவுக்கு அக்டோபர் மாதம் நிறைவு பெற்றிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வங்கக் கடலில் கடந்த வார இறுதியில் உருவான மோந்தா புயல் தீவிரப் புயலாக மாறி ஆந்திரம் அருகே கரையைக் கடந்தது. அதற்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தீபாவளியன்றும் மழை தொடர்ந்து. மோந்தா புயல் கரையைக் கடந்த நிலையில், கடந்த ஒரு சில நாள்களாக வெய்யில் தலைகாட்டி வருகிறது.
இன்று நவம்பர் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, அக்டோபர் மாதம் நிறைவு பெற்றுள்ளது. எப்படிப்பட்ட மாதமாக அக்டோபர் அமைந்திருந்தது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது இந்த அக்டோபர் மாதத்தில். குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களில் இயல்பான மழை அளவை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் தமிழகம் வழக்கமாக பெறும் மழை அளவு 171.9 மி.மீ. மழைதான். ஆனால் இந்த ஆண்டு பெய்திருப்பது 233.9 மி.மீ. மழை. இது இயல்பான அளவை விட, 36 சதவிகிதம் அதிகமாகும்.
அடுத்து நவம்பர் மாதம் வந்துவிட்டது. இந்த மாதத்தில் மழை அளவானது இயல்பான அளவை விடக் குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அக்டோபர் மாதத்தில் பெய்த அதிகப்படியான மழையானது சரிகட்டப்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.