நெல்லை: இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை மீண்டும் பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மருத்துவ குழுவுக்கு டீன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
களக்காடு அருகே உள்ள பத்மநிதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை இசக்கி (வயது 21). இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி அங்கு நடந்த கோவில் கொடை விழா தகராறில் இடது கை மணிக்கட்டு துண்டானது.
ரத்தம் சொட்டச்சொட்ட, துண்டிக்கப்பட்ட கையுடன் அவர் அன்று அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அங்கிருந்த மருத்துவக்குழுவினர் பிச்சை இசக்கிக்கு முதலுதவி அளித்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டனர்.
அன்று காலை 7 மணியளவில் போலீசார் மூலம் கொண்டு வரப்பட்ட துண்டிக்கப்பட்ட கையை, சுமார் 10 மணி நேரம் நீடித்த ஒரு மாபெரும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் மீண்டும் இசக்கிக்கு வெற்றிகரமாக பொருத்தினர். பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் எலும்பியல் துறை மருத்துவர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
முதலில், எலும்பியல் துறை மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட எலும்புகளை மீண்டும் இணைத்தனர். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நுண்ணோக்கிகள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் தசைநார்களை நுட்பமாக மீண்டும் இணைத்தனர். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு மீண்டும் கை செயல்பாட்டிற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த வெற்றிகரமான சிகிச்சையில் டீன் ரேவதி பாலன் வழிகாட்டுதலின் பேரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் அகமது மீரான், பாலாஜி, சூர்யா சர்மா, ராஜா, கோகுல் மற்றும் பால் வின்சென்ட், எலும்பியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராஜன், உதவி மருத்துவர் டாக்டர் அறிவு, மயக்கவியல் துறை நிபுணர்கள் டாக்டர் சௌந்தரி, லீலா மற்றும் செவிலியர்கள் அனிதா மற்றும் ஜான்சிராணி ஆகியோர் அறுவை சிகிச்சையின் போது உறுதுணையாக இருந்தனர்.
முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் யாதவ் மற்றும் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் நோயாளியை சரியான நேரத்தில் கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.
முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், இந்தச் சாதனைக்கு காரணமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை, எலும்பியல் துறை மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்பு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பான மருத்துவ சேவைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.