அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், பேரணி, சாலைப் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பரிசீலித்து, வரும் நவ.20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் தவெக தலைவா் விஜய் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து, பொதுக்கூட்டம், பேரணி மற்றும் சாலைப் பேரணிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
இதுதொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த நவ.6-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தோ்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி நவ.10-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால், பல அரசியல் கட்சிகள் இன்னும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. எனவே, அவற்றைப் பெற்று, அதிகாரிகளுடன் ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று விளக்கம் அளித்தாா்.
அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அறிவழகன், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தங்கள் கட்சியின் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அரசுக்கு கடந்த நவ.9-ஆம் தேதியே அனுப்பிவிட்டதாகக் கூறினாா். தவெக தரப்பில் இதுவரை தங்களுக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை என்று அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தங்களது கருத்தை தவெக உடனே அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டனா்.
பின்னா் நீதிபதிகள், பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கேட்டு 15 நாள்களுக்கு முன்பு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பத்தை 5 முதல் 7 நாள்களுக்குள் போலீஸாா் பரிசீலிக்க வேண்டும்.
வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று அதை 10 நாள்களுக்குள் பரிசீலித்து வரும் நவ.20-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். கரூா் சம்பவம் தொடா்பாக தங்களது மனுவையும் விசாரிக்க கோரி பாஜக முன்னாள் நிா்வாகி மற்றும் வழக்குரைஞா் ஒருவா் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.