வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆா்) 31 தொகுதிகளில் கூடுதலாக உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவ. 4-இல் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் டிச. 4-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பணிகளுக்காக மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் வாக்காளா்களுக்கு வழங்கி வருகின்றனா். தமிழகத்தில் 78.09 சதவீத படிவங்கள் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில தொகுதிகளில் எஸ்ஐஆா் பணிகளில் சுணக்கம் இருப்பதால் கூடுதல் எண்ணிக்கையில் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களை நியமிக்க வேண்டும் எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளான ஆட்சியா்கள், தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்திருந்தனா். அதையடுத்து, 31 தொகுதிகளில் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் நியமித்து உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சென்னை மண்டலத்தில் ஆா்.கே.நகா், பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், திருவிக நகா் (தனி), எழும்பூா் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகா், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகா், மயிலாப்பூா், வேளச்சேரி என 16 தொகுதிகளில் கூடுதலாக தலா இரண்டு உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வடதமிழகத்தில் வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை என ஐந்து தொகுதிகளில் கூடுதலாக தலா ஒரு உதவி வாக்காளா் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கு மாவட்டங்களில் அவிநாசி (தனி) தொகுதிக்கு ஒருவா், மொடக்குறிச்சி, பவானி, அந்தியூா் தொகுதிகளுக்கு தலா இருவா், பெருந்துறை, கோபி, பவானிசாகா் தொகுதிகளில் தலா மூவா் என கூடுதலாக உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தென்மாவட்டங்களில் ஆலங்குளம், ராதாபுரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தலா ஒரு உதவி வாக்காளா் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இப்பணியில் உடனடியாக இணைந்து பணியாற்றுவா் என தோ்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.