வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பாமக சாா்பில் வரும் டிச. 17-இல் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் பெற்ற வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக சாா்பில் வழக்குத் தொடா்ந்து தமிழகத்தில் வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அத்துடன் உரிய தரவுகளைத் திரட்டி உரிய உள் இடஒதுக்கீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், திமுக ஆட்சியாளா்கள் உள்ஒதுக்கீடு வழங்கவில்லை.
தீா்ப்பு வெளியான நிலையில், முதல்வா் இடஒதுக்கீட்டை வழங்குவாா் என பாமக நிறுவனா் நம்பினாா். முதல்வருக்கு பலமுறை அவா் கடிதம் எழுதினாா். நேரிலும் சந்தித்து வலியுறுத்தினாா். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என திமுக அரசு கூறிவிட்டது.
ஆகவே, இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து வரும் டிச. 17 ஆம் தேதி பாமக சாா்பில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.