சென்னை நகரை நோக்கி மற்றொரு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அடுத்த மேகக் கூட்டங்கள் சென்னை நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, கனமழை பெய்ய வாய்ப்பில்லை.
அரபிக் கடலை நோக்கி நகரும் புயல் சின்னம் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று - நாளை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்வதால், ஈரப்பதம் காரணமாக உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுங்கர், தேனி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகியவை கனமழை பெய்யும். மாஞ்சோலை மலைப் பகுதியைக் கண்காணிக்க வேண்டும். அங்கு அதிகளவிலான மழை பதிவாக வாய்ப்புள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய பதிவில், குமரிக் கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடல் நோக்கி நகர்ந்தவுடன், 5 நாள்களுக்குப் பிறகு, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
நவம்பர் கடைசி வாரத்தில் வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னத்தால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.