சீனிவாசன் 
தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: தலைமறைவான காசாளர் மும்பையில் கைது!

நாமக்கல்லில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.42.24 லட்சம் மோசடி செய்து தலைமறைவான காசாளரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.42.24 லட்சம் மோசடி செய்து தலைமறைவான காசாளரை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தின், துணை மேலாளராக பணியாற்றி வரும் சுரேந்திரன் என்பவர் நாமக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:

தனிநபர் கடன் பெற்ற வாடிக்கையாளர்களில், யாரெல்லாம் முறையாக தவணை கட்டுகிறார்கள். யாரெல்லாம் கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு உரிய தகவல்கள் போய் சேருகிறதா என்பதை, சம்பந்தப்பட்டவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்ட தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, நாமக்கல் கிளையில் தனிநபர் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் சிலரை தணிக்கை செய்தபோது, அருள்மணி என்பவர் முன்னதாகவே தவணைகளை கட்டியிருப்பது தெரியவந்தது. அவரை தொடர்பு கொண்டபோது, தனது கடனை நாமக்கல் கிளைக்கு நேரில் வந்து காசாளர் சீனிவாசன்(38) என்பவரை நேரில் சந்தித்து, கடன் தொகையை வட்டியுடன் முழுவதையும் கட்டி முடித்து அதற்கான ரசீதும் அவர் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்து, மேலும் 5 வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டபோது, அருள்மணி கூறியதுபோல், அவர்களும் தெரிவித்தனர். இது குறித்து, திருச்சியில் உள்ள முதுநிலை மேலாளர் ராஜ்குமாரிடம் தெரிவித்தேன். அவரும், கணினியில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

மறுநாள் நாமக்கல் கிளைக்கு வந்த ராஜ்குமார், காசாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார். வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை பெற்றுக்கொண்டு, அவர்களின் கணக்கில் முழுமையாக வரவு வைக்காமல், கடன் கணக்கு முடித்தது போல் போலி சான்றிதழ்களை அவரே தயாரித்து கொடுத்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணம் ரூ. 43 லட்சத்து 5,333-ஐ நிறுவன கணக்கில் செலுத்தாமல், முறைகேடாக தன் சொந்த பண பரிமாற்றத்திற்கு வைத்துக்கொண்டதை ஒப்புக் கொண்டார்.

அதேபோல், 38 நபர்களின் கடன் கணக்குகளில், 6 கடன் கணக்குகளை ரூ. 80,919 செலுத்தி, மீதமுள்ள 32 கடன் கணக்குகளையும், அதன் மதிப்பான ரூ. 42 லட்சத்து, 24,414-ஐ, மார்ச் 31க்குள் முடித்து விடுவதாக எழுதிக்கொடுத்துவிட்டு பணிக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார்.

வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று நிறுவனத்துக்கு செலுத்தாமல், சொந்த பண பரிமாற்றத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி, பொதுமக்களையும், பஜாஜ் நிறுவனத்தையும் ஏமாற்றிய சீனிவாசனை கண்டுபிடித்து மோசடி பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். அவர், மும்பையில் பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், மும்பை தாராவியில் பதுங்கியிருந்த சீனிவாசனை கைது செய்து, நாமக்கல் அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:

கடந்த மார்ச் மாதம் பஜாஜ் நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் புகார் அளித்ததையடுத்து விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே உயர்நீதிமன்றம் மூலமாக அந்நிறுவனம் அழுத்தம் கொடுத்தது.

அதன்பேரில், நவ.11ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட காசாளர் சேலம் மாவட்டம் வீராணம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசனை தேடி வந்தோம். அவர் மும்பையில் பதிங்கிருப்பது தெரிய வந்ததையடுத்து அங்கு சென்று அவரை கைது செய்து நாமக்கல் அழைத்து வந்தோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

அகமதாபாத்தில் தங்கக் கடத்தலை முறியடித்த டிஆர்ஐ அதிகாரிகள்!

கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் அல்ல; தீர விசாரிப்பதே மெய்! - ‘அவிஹிதம்’

பெர்த் டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு!

தஞ்சைப் பெரிய கோயில் - 50 வேலைத்திட்டம் - நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT