தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறுகையில்,
இந்தியக் கடல் பகுதியில் மூன்று சுழற்சிகள் நிலவுகிறது. முன்னதாக நேற்று (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
நேற்று (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி, இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் (நாளை), குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது.
அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகுதான் திசையைக் கணிக்க முடியும். அதற்கு முன்னதாக கணிக்க இயலாது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் அதிக மழை தருவதற்கான வாய்ப்பு உள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை இந்தாண்டு 5 சதவிகிதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் இயல்பை விடக் கூடுதலாக மழைப் பதிவாகியுள்ளது. ஆனால் சென்னையில் இயல்பாகப் பதிவாகும் அளவைவிடக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாள்களில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 24 நேரத்தில் ஊத்து 23 செ.மீ. மழையும், நாலுமுக்கு 22 செ.மீ., சேத்தியாத்தோப்பு 21 செ.மீ., மாஞ்சோலை 19 செ.மீட்டர் என நெல்லையில் 4 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.
நவ. 24, 25 தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நவ. 26ம் தேதி 7 மாவட்டங்களிலும், நவ. 27ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை,திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நவ. 28ல் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ 29்ல் வட கடலோரத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் தர்மேந்திரா காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.