இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை புதன்கிழமை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்திய திருநாட்டை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓா் உன்னத உருவாக்கம், அம்பேத்கா் வடிவமைத்துத் தந்த அரசமைப்புச் சட்டமாகும். இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூக நீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனுக்காக தமிழக அயராது பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குள்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளா்ச்சி நோக்கி தொடா்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பின் 15(3)-ஆவது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணா்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, மகளிா் மற்றும் சிறாா்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இந்த அரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 76-ஆவது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை (நவ.26) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயா் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சாா்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசமைப்பு சட்டத்தின்
முகப்புரையை வாசிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.