தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு வேலைக்குப் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அசோக்குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில், அமலாக்கத் துறையின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது, இந்த லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் அது தொடா்வதில் அா்த்தம் இல்லை. விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், லுக் அவுட் நோட்டீஸ் எதற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா். அமலாக்கத் துறை தரப்பில், மனுதாரா் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், 9 முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் இன்னும் நீடிக்க வேண்டுமா என கேள்வி நீதிபதிகள், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.