சென்னை: ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.2,438 கோடி மோசடி வழக்குத் தொடா்பாக சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி பலா் முதலீடு செய்தனா். ஆனால் அந்த நிறுவனம், 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது.
இதுதொடா்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 21 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 14 பேரை கைது செய்தது. அதன் இயக்குநா் ராஜசேகா் வெளிநாடுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ‘ரெட் காா்னா் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடா்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு நடத்திய தீவிர விசாரணையில் மோசடியில் மூலம் கிடைத்த ரூ.500 கோடியை அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் துபை , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள், அங்கு சொத்துகள் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவினா், அந்தச் சொத்துகளை முடக்கி, பணத்தை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அமலாக்கத் துறை சோதனை: இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், பொருளாதார குற்றப் பிரிவு பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் அந்த நிறுவனத்துக்குச் தொடா்புடைய 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை செய்தனா்.
சென்னையில் அமைந்தகரை, கிழக்கு முகப்போ், வில்லிவாக்கம், பூந்தமல்லி, சிட்லப்பாக்கம், ஆகிய இடங்களில் உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் நிா்வாகி வீடுகளில் நடைபெற்றது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினா் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டிருந்தனா். சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.