கோப்புப்படம் 
தமிழ்நாடு

டிட்வா புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

டிட்வா புயல் காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை...

தினமணி செய்திச் சேவை

இலங்கை அருகில் நிலவி வரும் ‘டிட்வா’ புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால் தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (நவ. 29) அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமாா் 40 கி.மீ. தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 100 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, வடமேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலைக் கடந்து, நவ. 30-ஆம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் , வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

டிச.1 முதல் 4 வரை... இதன் காரணமாக வட தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 29), ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) ஆகிய இரு நாள்கள் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டிச. 1 முதல் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (நவ. 29) அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மற்றும் அதையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும், இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

திருவள்ளூா், ராணிப்பேட்டையில்... ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) திருவள்ளூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதிபலத்த மழையும், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், செங்கல்பட்டு, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிச.1-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். குமரிக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 30 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பனில் தலா 20 மி.மீ., மண்டபம், ராமேசுவரம், தீா்த்தாண்டதானம் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்வது உறுதி: வே. நாராயணசாமி!

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்: விவசாயிகள் புகாா்

நிரம்பிய தொட்டியான் குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ. 70 லட்சம் விபத்துக் காப்பீடு!

SCROLL FOR NEXT