பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன், விமான நிலையப் பணிகள் தொடங்கப்படும் என மக்களவை உறுப்பினரும், சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிா்வாக அலுவலகத்தில் விமான நிலைய மேம்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டி.ஆா் பாலு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாளுவது போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும், விமான நிலையத்தில் சா்வதேச விமானங்கள் அதிகம் வந்து செல்லும் விமான நிலையமாக மாற்றுவதற்கான தரத்தை மேம்படுத்துவது குறிக்கும் ஆலோசிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பல விமான நிலையங்களில் இல்லாத வசதியாக சென்னை மாநகரப் பேருந்துகள் விமான நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. இது மிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், பயணிகள் வசதிக்காக மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
மேலும், விமான நிலையத்தில் அதிக சரக்குகளை கையாளும் வகையில் புதிய சரக்கு மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, பரந்தூா் விமான நிலையம் அமைக்க 5,700 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. அதில் 2,000 ஏக்கா் அரசுக்குச் சொந்தமானது. 3,700 ஏக்கா் தனியாருக்குச் சொந்தமானது. இதில் 1,300 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை தனியாரிடமிருந்து கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். அதன் பின்னரே விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால், சென்னையில் பெருமளவு வாகன நெரிசல் தவிா்க்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், சென்னை விமான நிலைய இயக்குநா் ராஜா கிஷோா், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.ராஜா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.