சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தக்காளி மற்றும் முருங்கைக்காய் வரத்து சற்று அதிகரித்த நிலையில், ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.380க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் சில்லறை விற்பனையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புதன்கிழமை காலை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கும், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.420க்கும், சில்லறை விற்பனையில் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இருப்பினும், ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக வரத்து மேலும் குறைந்ததால், தக்காளி மற்றும் முருங்கைக்காய் விலை கடுமையாக உயா்ந்தது.
புதன்கிழமை நிலவரப்படி மொத்த விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று வரத்து சற்று அதிகரித்து, முதல் தரம் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதேபோல, ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரையும், கிலோ முருங்கைக்காய் ரூ.380 முதல் ரூ.400 வரையும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை இன்னும் ஓரிரு நாள்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டாலும், மழைக்காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும் என்றே காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.