குலசேகரப்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறவுள்ளது.
தசரா விழாக் கொண்டாட்டத்தில், மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம்தான். திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைக் காண, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவர்.
10 நாள்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழா நிகழ்ச்சிகளில் காளி, அம்மன், சிவன், பார்வதி, முருகன், அரக்கர், குரங்கு, தாடகை, குறவன் - குறத்தி போன்று பல வண்ணமிகு வேடங்களை அணிந்துகொண்டு ஊர்வலமாகச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10 ஆம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு 11 மணிக்கு அடுத்ததாக சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.