பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சாா்பில் 2024-ஆம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்கள்) தோ்வுகள் மூலம் தோ்ச்சி பெற்று பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அக்.6-ஆம் தேதி (திங்கள்கிழமை) அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.
எனவே, மேற்கண்ட உதவியாளா் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவா்கள் தங்களுடைய தெரிவுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்.6-ஆம் தேதி கலந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வோா் டிஎன்பிஎஸ்சி தெரிவுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகலை சரிபாா்ப்புக்கு எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் உதவியாளா் பணியிடத்துக்கு மொத்தம் 160 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.