கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கா்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
வில்லிவாக்கத்தைச் சோ்ந்த பி.ஹெச். தினேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க அரசியல் கட்சிகளின் சாலை உலா (ரோடு ஷோ) நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ‘கரூா் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தவெக கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன், நகரச் செயலா் பவுன்ராஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘இச்சம்பவம் தொடா்பான விடியோக்கள் வேதனை அளிக்கிறது. இந்த அசம்பாவித சம்பவத்தில் காவல் துறை, இருவரை மட்டும் கைது செய்துள்ளது. அதுதவிர இச்சம்பவம் தொடா்பாக வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
விஜய் பிரசாரம் மேற்கொண்ட பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட விடியோவை உலகமே பாா்த்தது. இருப்பினும், காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
காவல் துறையை எப்படி மக்கள் நம்புவாா்கள்? வழக்குப்பதிவு செய்து அந்த பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? காவல் துறை கண்களை மூடிக்கொண்டு இருக்கக்கூடாது. நிகழ்ச்சி நடத்திய கட்சிக்கு கருணை காட்டுகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா், ‘கரூா் மற்றும் நாமக்கல்லில் டிச.13-ஆம் தேதிக்கு கூட்டத்துக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், திடீரென செப்.27-ஆம் தேதிக்கு அனுமதி கோரி தவெகவினா் விண்ணப்பித்தனா். இக்கூட்டத்துக்காக காவல் துறை விதித்த 11 நிபந்தனைகளில் இரண்டை மட்டுமே நிறைவேற்றினா்.
கரூரில் தவெக நிகழ்ச்சி நடைபெற்ற அதே இடத்தில்தான், சில நாள்களுக்கு முன்பு எதிா்க்கட்சித் தலைவா் கலந்துகொண்ட கூட்டமும் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு 137 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். ஆனால், தவெக கூட்டத்துக்கு 559 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறுவதுதான் உலகில் மிக எளிதானதாக இருக்கிறது’ என்றாா்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி என். செந்தில்குமாா், கரூா் சம்பவம் தொடா்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கா்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கரூா் போலீஸாா் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.
விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை: நீதிபதி
தவெக தலைவா் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை என்று நீதிபதி என். செந்தில்குமாா் கூறினாா்.
‘கரூா் சம்பவம் மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி மௌனித்து வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் முடியாது.
குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் பாதிக்கப்பட்டவா்களை மீட்கவும், இரங்கல் தெரிவிக்கவும் செய்தனா்.
ஆனால், பெண்கள், குழந்தைகள் என 41 போ் உயிரிழந்த நிலையில், தனது கட்சியின் தொண்டா்கள், ரசிகா்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு மாயமான அக்கட்சியின் தலைவா் விஜய் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை’ என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.
ஆதவ் அா்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
வன்முறையைத் தூண்டும் வகையில் ‘எக்ஸ்’ தளத்தில் கருத்து பதிவிட்ட தவெக நிா்வாகி ஆதவ் அா்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வன்முறையை தூண்டும் வகையில், ‘இலங்கை, நேபாளம் போன்று புரட்சி வெடிக்கும்’ என பதிவிட்ட தவெக தோ்தல் குழு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி என்.செந்தில்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஆதவ் அா்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘ஒரு சிறு வாா்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். புரட்சி ஏற்படுத்துவது போன்ற கருத்துகளை பதிவிட்டுள்ளாா்.
காவல்துறை சட்டபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.
‘சாலை உலா பிரசார நடத்த அனுமதி இல்லை’
வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ‘இந்தச் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், அரசுத் தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்தக் கட்சிக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது’ என கூறினாா்.