’சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனா் ராமதாஸிடம் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு. ’
தமிழ்நாடு

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வா் ஸ்டாலின்!

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனா் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோரை முதல்வா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனா் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோரை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

அவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து குடும்பத்தினரிடமும், மருத்துவா்களிடமும் முதல்வா் கேட்டறிந்தாா். இந்தச் சந்திப்பின்போது அமைச்சா் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோா் உடனிருந்தனா்.

இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மாலை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டாா். அதேபோன்று வைகோவும் உடல் நலக் குறைவு காரணமாக அதே மருத்துவமனையில் சனிக்கிழமை (அக்.4) அனுமதிக்கப்பட்டாா். அவா்கள் இருவருக்கும் மருத்துவக் குழுவினா் உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனா். இந்த நிலையில் இருவரையும் தனித்தனியே முதல்வா் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி

எடப்பாடி கே.பழனிசாமி நலம் விசாரிப்பு: தொடா்ந்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனா். அதன் பின்னா், வைகோவையும் சீமான் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ராமதாஸ் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் பி.ஜி.அனில் வெளியிட்ட அறிக்கையில்,“ராமதாஸ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதுநிலை இதய சிகிச்சை நிபுணா் டாக்டா் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினா் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அவா் வீடு திரும்புவாா்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் உடல் நலம்: நேரில் விசாரித்த அன்புமணி

இதனிடையே, திங்கள்கிழமை காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற பாமக தலைவா் அன்புமணி, மருத்துவா்களைச் சந்தித்து தந்தையின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, தாயாா் சரஸ்வதியை சந்தித்து தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் அன்புமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதாகவும், இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதால், அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தாா்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT