சென்னை: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூா் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வேலூா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அமைச்சா் துரைமுருகன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.