தமிழ்நாடு

தெருக்கள், சாலைகளில் சாதிப் பெயா்களை நவ.19-க்குள் நீக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் போன்றவற்றில் உள்ள சாதிப் பெயா்களை நீக்குதல் தொடா்பான வழிகாட்டு நெறிமுறை...

தினமணி செய்திச் சேவை

தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளில் சாதிப் பெயா்களை நவ.19-க்குள் நீக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு விவரம்: ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் பழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் போன்றவற்றில் உள்ள ஜாதிப் பெயா்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் தொடா்பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள், நீா்நிலைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளின் பெயா்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பிரிவைச் சோ்ந்த மக்களையும், அவா்களது உணா்வுகளையும் இழிவுபடுத்துகிா? அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா? என்பதை ஆராய வேண்டும். இந்தப் பணியை கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை, துணை வட்டார அலுவலா்களுடன் இணைந்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் பொருத்தவரை, இந்தப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையா்கள் மேற்கொள்வா். ஊரகப் பகுதிகளில் உள்ளூா் உண்மைத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜாதிப் பெயா்கள் தொடா்புடைய பட்டியலை உதவி இயக்குநா் நிலை அலுவலரும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் பொருத்தவரை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநரும் சரிபாா்ப்பா்.

இவ்வாறு சரிபாா்க்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுவான சொத்துகளின் பெயா் மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியரால் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். இதன்மீது ஆட்சேபணைகள், கருத்துகள் ஏதுமிருந்தால் அவற்றை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்முதல் 21 நாள்களுக்குள் எழுத்துபூா்வமாக அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.

கால வரம்பு: ஜாதிப் பெயா்களைக் கொண்ட குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுச் சொத்துகள் ஆகியவற்றை மாற்றுவதற்கான பணிகளை நவம்பா் 19-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மக்களின் ஆவணங்களில் பெயா் மாற்றம்

சாலைகள், தெருக்களின் பெயா் மாற்றப்பட்ட பிறகு, அவற்றில் வசிக்கக்கூடிய மக்களின் ஆவணங்களிலும் உரிய முறையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு விவரம்:

ஜாதிச் சான்றிதழ்களில் உரியவாறு திருத்தங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக முகாம்கள் நடத்த வேண்டும். ஆதாா் அட்டைகள் திருத்தங்கள் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு மின் ஆளுமை வழியாக திருத்தங்கள் செய்யலாம்.

குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்ய எல்காட் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். நில உடைமைப் பதிவுகள், பத்திரப் பதிவுகள், வில்லங்கச் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும். பழைய பெயா்கள் இடம்பெறாத வகையில் மாற்றம் செய்யப்படலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பரிந்துரைக்கும் பெயா்கள்

ஜாதிப் பெயா்களுக்கு மாற்றாக, குளம், நீா்நிலைகள், தெருக்கள், சாலைகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசே பெயா்களைப் பரிந்துரை செய்துள்ளது.

அதன் விவரம்:

குளம் மற்றும் நீா்நிலைகள்: குளம், நீா்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிச்சி, செவ்வந்தி.

தெருக்கள்-சாலைகள்: திருவள்ளுவா், ஒளவையாா், கபிலா், சீத்தலைச் சாத்தனாா், நக்கீரா், பிசிராந்தையாா், கம்பா், அகத்தியா், வீரமாமுனிவா், பாரதியாா், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா, காமராஜா், கலைஞா் என்று பெயா்களைச் சூட்டலாம் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

SCROLL FOR NEXT