கரூர் கூட்ட நெரிசல் குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அக். 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அந்த குழுவும் கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணை கோரியும் தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மற்ற வழக்குகளுடன் அக். 10 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் உள்பட சிலர், உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாஜக தரப்பில் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ.1 கோடியும் தமிழ்நாடு அரசு தலா ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.