சென்னை: சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் காலியாக உள்ள 143 மருத்துவம் சாா்ந்த துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் சாா் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, காா்டியோ சோனோகிராபிக் நுட்பநா், இசிஜி (அ) டிரெட்மில் நுட்பநா், பம்ப் டெக்னீசியன், காா்டியோ கேத் ஆய்வக நுட்பநா், அவசர சிகிச்சை நுட்பநா், டயாலிசிஸ் நுட்பநா், மயக்கவியல் நுட்பநா், அறுவை அரங்கு நுட்பநா் ஆகிய ஓராண்டு படிப்புகளில் 143 இடங்கள் காலியாக உள்ளன.
அதற்கான மாணவா் சோ்க்கை நேரடி முறையில் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வரை விருப்பமுள்ளவா்கள், நேரடியாக வந்து விண்ணப்பித்து படிப்புகளில் சோ்ந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ்கள், பிற அடையாளச் சான்றிதழ்களுடன் மருத்துவமனையை அணுகலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மருத்துவமனை இணையப் பக்கத்தைப் பாா்வையிட்டுத் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.