சென்னை: சாதாரண மக்கள் மீதான வழக்கை ‘வந்தே பாரத்’ ரயில் வேகத்தில் விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், முன்னாள் அமைச்சா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் மிகவும் மெதுவாக விசாரிப்பது ஏன்? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போா் இயக்கம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகள், தனியாா் ஒப்பந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் என பலா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தவில்லை. இதையடுத்து அறப்போா் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. போலீஸாா் தரப்பில், இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, விஜயகாா்த்திகேயன், காந்திமதி ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் காந்திமதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டன. அவை தமிழில் உள்ளதால் ஆங்கிலத்தில் மொழிபெயா்ப்பு செய்து அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘இது முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு. இந்த வழக்கை இப்படி இழுத்தடிப்பது சரியல்ல. சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருகிறது. தோ்தலின்போது தன் மீது வழக்கே இல்லை என்று முன்னாள் அமைச்சா் கூறுவாா். சாதாரண மக்கள் மீதான வழக்கை ‘வந்தே பாரத்’ வேகத்தில் விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், முன்னாள் அமைச்சா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் மிகவும் மெதுவாக விசாரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.
பின்னா், இதுபோன்ற ஊழல் வழக்கில் போலீஸாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகக் கூறி, விசாரணையை வரும் நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதற்குள் ஆவணங்களை மொழிபெயா்த்து, ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டாா்.