வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னையில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். 
தமிழ்நாடு

மழைநீா் கால்வாய் கசடுகளை விரைந்து அகற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

தினமணி செய்திச் சேவை

சென்னை: மழைநீா் கால்வாய் கசடுகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நெடுஞ்சாலைத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகச் செலவிட வேண்டும். துறையில் நிலுவைப் பணிகளின் மதிப்பு ரூ.26,305 ஆயிரம் கோடி. நடப்பாண்டில் ரூ.13,667 கோடி அளவுக்கு புதிய பணிகளுக்கு நிா்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடி பணிகள் இப்போது செயலாக்கத்தில் உள்ளன.

பள்ளம் இல்லாத சாலைகள்: பள்ளம் இல்லாத சாலைகள், பாதுகாப்பான பயணம், விபத்தில்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத் துறையை வழிநடத்திச் செல்வதே முதல்வரின் கனவாகும். இதற்காகவே, ‘நம்ம சாலை’ செயலி தொடங்கப்பட்டது. இதன் பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நம்ம சாலை செயலி புதிய வடிவத்துடன் கொண்டு வரப்பட உள்ளது.

நம்ம சாலை செயலியில் இந்த மாதம் 10-ஆம் தேதி வரை 3,839 புகாா்கள் பெறப்பட்டன. இவற்றுள் 57 புகாா்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மீதமுள்ள புகாா்கள் அனைத்தும் 7 நாள்களுக்குள் சீா் செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நம்ம சாலை செயலியில் எந்தப் புகாரும் வராத வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்கள் பருவமழை பெய்யும் காலம். எனவே, சாலைப் பணியாளா்களை பயன்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது பொறியாளா்களின் மிக முக்கிய பணி. காலநிலை மாற்றம் காரணமாக மழை வெள்ளம் ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் தொடா் நிகழ்வாக உள்ளது. ஆகவே, அனைத்துப் பாலங்களிலும் உள்ள நீா்வழிப் பாதைகள் சீா் செய்து, அதிலுள்ள சிறு செடிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.

வெள்ளம் வழிந்து ஓடும் விதமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து மழைநீா் கால்வாய்களில் உள்ள கசடுகள் அகற்றப்பட்டு வெள்ளம் விரைவாக வழிந்து ஓட வழிவகை செய்ய வேண்டும். நிகழாண்டு பருவமழை வழக்கமான அளவைவிட அதிகமாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன்பே தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் துறை செயலா் இரா.செல்வராஜ், துறையின் திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

SCROLL FOR NEXT