சென்னை: பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள் என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை வழக்கம் போல் தொடங்கி வினா விடை நேரம் நிறைவடைந்தபோது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் அன்போடும் அமைதியோடும் பேசக் கூடியவர். கட்சி பாகுபாடின்றி இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன், கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை என்று கூறினார்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், அவர் விமர்சனங்களை முன்வைக்கும்போதுகூட கோபத்துடன் சொல்ல மாட்டார். அவ்வளவு ஏன், வெளிநடப்பு செய்யும்போது கூட சிரித்துக் கொண்டே வெளிநடப்பு செய்பவர். யாருக்கும் எந்த வகையிலும் கோபம் வராத வகையில் அணுகக் கூடியவர். ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன், இன்று 64 வயது முடிந்து 65 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று கூறினார்.
ஸ்டாலினின் இதைக் கூறியபோது, நயினார் நாகேந்திரனுடன் அங்கிருந்த அனைவருமே புன்னகைப் பூத்தனர்.
அவருக்கு என்னுடைய சார்பில் திமுக சார்பிலும், திமுக எம்எல்எக்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் சார்பிலும் இந்த பேரவையில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பிறகு, எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக் கூடிய அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும், பேரவையில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பேரவை சார்பில் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.