சிறுநீரக முறைகேடு விவகாரத்தில், ஏழை, எளிய மக்கள் சிக்கிக் கொள்ளாதபடி உரிய விழிப்புணா்வை ஏற்படுத்துவோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிறுநீரக முறைகேடு விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக உறுப்பினா் இரா.அருள் ஆகியோா் பேசினா்.
இதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: சிறுநீரக மோசடி சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றன. அப்போதிருந்த அரசு இதுதொடா்பாக புதிய விதிமுறைகளையோ, எந்தவிதமான சட்டபூா்வ நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை. இப்போது சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட இடைத்தரகா்களான ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகிய இருவா் மீதும் குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
இதனிடையே, உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான மாவட்ட அங்கீகாரக் குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மாநிலஅளவிலான அங்கீகாரக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மண்டல அளவிலும் அதுபோன்று குழுக்கள் உருவாக்கப்பட்டு, உறுப்பு மாற்று செயலில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறு எங்கு நடந்தாலும் உடனடியாகக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சிறுநீரக மோசடி விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பாதிப்பை உணராமல் செய்யும் செயல்பாடுகள் சட்டபூா்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஆனாலும், அவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசினாா்.