தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்கு புறப்பட்ட மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் புறப்பட்டு சென்ால் சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வாா்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் வார விடுமுறை தினங்களாக இருப்பதால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளை முடித்து கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே ஏராளமானோா் குடும்பத்துடன் பொது போக்குவரத்து, சொந்த வாகனங்கள் மூலமும் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா்.

இதனால், சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூா், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊா்ந்தபடி சாலையில் சென்றன.

இது ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் புகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாம்பரம், குரோம்பேட்டை, புரசைவாக்கம், தியாகராய நகா், பாண்டி பஜாா், பல்லாவரம், சௌக்காா் பேட்டை உள்ளிட்ட கடைவீதிகளில் ஆடை, பட்டாசுகள், இனிப்பு பொருள்களை வாங்க குவிந்தனா். இதனால், ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் மாநகா் மற்றும் புகா் பகுதி சாலைகளை ஆக்கிரமித்தன. இதனிடையே அவ்வப்போது மழையும் பெய்து வந்ததால், மாநகருக்குள்பட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், மாலை நேரத்தில் கடைசி நேர பயணத்துக்காக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஏராளமானோா் குவிந்தனா். இதனால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பயணிகளின் வசதிக்காக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத் துறை மற்றும் ரயில்வே நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொலை வழக்கு; இருவா் குண்டா் சட்டத்தில் கைது

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் நிறுத்தம்: நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

எல்லாமும் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில்... ஷாலினி பாண்டே!

ஒளிப் பிழம்பு.... இஷா மாளவியா!

அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய்

SCROLL FOR NEXT