வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு, இங்குள்ள அரசியல் தெரியாது என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"இந்தியாவின் குடிமகன் யார் என்று நிர்ணயம் செய்யும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு யாரும் தரவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே வசித்துவரும் இலங்கைத் தமிழர்களுக்குமே நாம் இன்னும் வாக்களிக்க உரிமை தரவில்லை.
பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்காக வருவோர் தற்காலிகமாகத்தான் வருகிறார்கள். திருச்சியில் 3 மாதம், கோவையில் 3 மாதம், நெல்லையில் 3 மாதம் என்று மாறி இடம்பெயர்ந்து வேலை செய்வோரை எப்படி நிரந்தரமாகக் கருதி வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்?
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்வோர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்கள்.
எனவே, தற்காலிகமாக தமிழ்நாட்டுக்கு வந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை தர முடியாது. அவர்களுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது.
தமிழ்நாட்டிலுள்ள அதிகாரிகள் நேர்மையானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு மேலிருந்து வரும் கட்டளைகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனைப் பின்பற்ற வேண்டிய சூழல் வரும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகதான் காணாமல் போய்விடும். எங்கள் தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார். திராவிட மாடலின் பார்ட் 2 தொடரும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.