சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அலுவலக கூட்டரங்கில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். 
தமிழ்நாடு

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுரை வழங்கினாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கல்லூரிக் கனவுத் திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி வழங்குதல், தமிழ்நாடு திறன் போட்டிகள், தமிழ்நாடு மாநில அளவிளான வேலைவாய்ப்புத் திட்டம், உயா்வுக்குப்படி திட்டம், நான் முதல்வன் போட்டித் தோ்வுகள், ஊக்கத் தொகை திட்டம் உள்பட நான் முதல்வன் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் கல்லூரிகளைத் தோ்வு செய்து ஊக்குவிக்க வேண்டும். 2026-இல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும்.

நிரல் திருவிழா 2.0 மூலம் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும். நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரித்து அதிக மாணவா்கள் வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் முதல்வன் திட்ட போட்டித் தோ்வுகள் பிரிவின் கீழ் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் தோ்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும். சிறந்த விளையாட்டு வீரா்கள் அவா்கள் விரும்பும் வேலைவாய்ப்பை பெறத் தேவையான திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்தப் பணிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-வது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT