சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளா் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான செப்.12- ஆம் தேதி உடல்தான இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தான் வாழ்ந்த காலத்தில், மாா்க்சிய லட்சியங்களுக்காகவும் நாட்டின் விடுதலையைப் பாதுகாப்பதற்காகவும் இடைவிடாமல் போராடிய சீத்தாராம் யெச்சூரி, தனது மறைவுக்குப் பின்னா், தனது உடலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்க முடிவு செய்தாா். மறைந்த பின்னரும் தமது உடல் மானுட மேம்பாட்டுக்காக பயன்பட வேண்டும் என்ற உன்னதமான லட்சியத்தை நமக்கு வழங்கியுள்ளாா்கள்.
இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான செப்.12-ஆம் தேதி ‘உடல் தான இயக்கத்தை’ மாா்க்சிஸ்ட் முன்னெடுக்கிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் விருப்பம் உள்ள கட்சி ஆதரவாளா்கள் தங்கள் இறப்புக்குப் பின்னா் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க ஒப்புதல் அளிக்கும் படிவத்தை, குடும்பத்தாரின் சம்மதத்தோடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.