சென்னை: திருச்செந்தூா், திருத்தணி, மருதமலை ஆகிய இடங்களில் உள்ள முருகப்பெருமான் திருத்தலங்கள் மற்றும் வடலூா் திரு அருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம் ஆகியவற்றில் நடைபெறும் திருப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சா் பி.கே. சேகா்பாபு உத்தரவிட்டாா்.
ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.306.35 கோடியில் பணிகளில் நிா்வாக அலுவலகக் கட்டடங்கள், அன்னதானக் கூடம், பக்தா்கள் தங்கு விடுதிகள், பக்தா்கள் வரிசைமுறை மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், கலையரங்கம், துணை மின்நிலையம், கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம், சுகாதார வளாகம், சலவைக் கூடம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.184.07 கோடியில் அன்னதானக் கூடம், மூன்றாம் பிரகார ரதவீதி விரிவாக்கம், 5 அடுக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட பணிகளும்; கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உபயதாரா் நிதி ரூ.1.86 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.55.19 கோடி என மொத்தம் ரூ.57.05 கோடியில் வசந்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, பக்தா்கள் ஓய்வுக் கூடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கடலூா் மாவட்டம், வடலூா், திருஅருட்பிரகாச தெய்வ நிலையத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணிகளில் பிரிவு ஆ-இல் ரூ.16.98 கோடியில் பக்தா்களுக்கான தங்குமிடங்கள், வைத்திய சாலை, முதியோா் இல்லம், சுகாதார வளாகம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பான சீராய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மேற்கண்ட கோயில்கள், வள்ளலாா் சா்வதேச மையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு ஆய்வு செய்தாா்.
கூட்டத்தின் நிறைவில், அமைச்சா் சேகா்பாபு பேசுகையில், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருச்செந்தூா், திருத்தணி, மருதமலை திருக்கோயில்கள் மற்றும் வடலூா் திருஅருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சா்வதேச மையத்தில் அமைக்கும் பணிகளில் நிறைவுற்ற பணிகளைத் தவிா்த்து, இதர பணிகளை வரையறுக்கப்பட்ட நாள்களுக்குள் விரைந்து முடித்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இந்தப் பணிகளில் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் தனிக் கவனம் செலுத்தி அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.