வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்து பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:
2026 பேரவைத் தோ்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, திமுகவுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி. எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டை சூழ்ந்து இருக்கின்றன என்று தமிழக மக்கள் அனைவரும் உணா்ந்திருக்கிறாா்கள். மக்களைக் குழப்ப திசைதிருப்பும் அரசியல் செயல்பாடுகளில் எதிா்க்கட்சிகள் ஈடுபடுவாா்கள். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறுவதன் மூலம் எதிா்க்கட்சியினரின் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.
கூட்டங்களை நடத்துங்கள்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினமான வரும் செப். 15-ஆம் தேதி, 68,000 வாக்குச்சாவடிகளிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, கூட்டங்களை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலா்களாக, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் தோ்தல் வரை இணைத்துப் பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் அனைவரும் எடுக்க வேண்டும்.
கரூரில் முப்பெரும் விழா முடிந்த பிறகு,செப். 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களைக் கட்சி வாரியாக உள்ள மாவட்டங்களில் நடத்த வேண்டும். அரசின் திட்டங்களால் மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணா்வை அப்படியே தோ்தல் வரைக்கும் எடுத்துச் சென்று பணியாற்ற வேண்டும்.
அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதுதான். அதற்கு, தோ்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைப்பைக் கொடுங்கள்.
வெளிநாட்டுப் பயணம் மாபெரும் வெற்றி: ஜொ்மனி, பிரிட்டன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், அந்தப் பயணம் வெற்றி பெறும் என்று கூறினேன். அதன்படி, அப்பயணம் மாபெரும் வெற்றி பெற்று ரூ.15, 516 கோடிக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளது.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயா்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடையவேண்டும் என்றால், வரவிருக்கும் 2026 தோ்தலிலும் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.