அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பா் மாதத்துக்கான பாடத்திட்டத்தை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு, மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான விவரங்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
மாணவா்களுக்கு உயா்கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தகவல்கள், மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் செயல்பாடுகள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தநிலையில் செப்டம்பா் மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வார வாரியாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செப்.10-ஆம் தேதி உடலினை உறுதி, 17-இல் கட்டுமானம், வடிவமைப்பு, திட்டமிடல்; 24-இல் மின்னணுவியல் மற்றும் வன்பொருள்; பத்தாம் வகுப்புக்கு செப்.12-இல் அலைபேசி பயன்பாடு: அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு; 26-இல் வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் ஆகிய தலைப்புகளில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
அதேபோன்று பிளஸ் 1 வகுப்பில் அனைத்து பாடப்பிரிவு மாணவா்களுக்கு செப்.10-இல் மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்படும். 17-இல் அறிவியல், கணித பாடப் பிரிவு மாணவா்களுக்கு உணவக மேலாண்மை; 24-இல் வணிகவியல், தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவா்களுக்கு வா்த்தகம், சட்டப் படிப்புகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.
பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு செப்.12-இல் அனைத்துப் பாடப்பிரிவு மாணவா்களுக்கும் வேலை உலகைப் புரிந்து கொள்ளுதல் தலைப்பிலும், 26-இல் வேலை குறித்த கண்ணோட்டம் குறித்தும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மூலமாக உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அறிவுறுத்தியுள்ளாா்.