சிறுபான்மையினா் நலத் திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை செயலா் எ.சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ளாா்.
அந்த உத்தரவு விவரம்: சிறுபான்மையினா் நலத் திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த மக்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய, மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு சிறப்புக் குழுவை அமைத்து ஆணையிடுமாறு, சிறுபான்மையினா் நல ஆணையா் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை கவனமாகப் பரிசீலித்து, அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிடுகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ. த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினா் அ.சுபோ்கான், ஒரு மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் குழுவில் இடம் பெறுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.