சென்னை: போலியாக கால் சென்டர் நடத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரிடமிருந்து பணத்தை பெற்று சுமார் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த இரண்டு பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலி கால் சென்டர் நடத்தி பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக பொன்செல்வி மற்றும் முனிரதா (28) என்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கிகளின் பெயரில், பொதுமக்களை தொடர்பு கொண்டு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி, அவர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் நடத்திய வந்த போலி கால் சென்டரில் சோதனை நடத்திய காவல்துறையினர், 42 சிம் கார்டுகள், 17 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
திருக்கனூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஷங்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான் இந்த போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரபல தனியார் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஒரு பெண் ஷங்கரைத் தொடர்பு கொண்டுள்ளார். ரூ.50 ஆயிரம் முதல் 14 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக அவர் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். ஷங்கரும் அதனை நம்பி, வாட்ஸ்ஆப் மூலம் ஆவணங்களை கொடுத்துள்ளார். அனைத்தையும் பெற்றக் கொண்ட பிறகு, கடன் செயலாக்கக் கட்டணம், ஜிஎஸ்டி, ஆவணங்கள் சரிபார்ப்புக் கட்டணம் என ரூ.71 ஆயிரம் கேட்டுள்ளனர். ஷங்கரும் இவை அனைத்தும் உண்மை என நம்பி பல தவணைகளாக இந்தத் தொகை செலுத்தியிருக்கிறார்.
அதன்பிறகு, அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, வழக்குப் பதிவு செய்த, காவல்துறை ஆய்வாளர் கீர்த்தி விசாரணையைத் தொடங்கினார்.
சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் புழல் பகுதிகளில் விசாரணை நடத்தி, அங்கு தனியார் நிறுவனம் பெயரில் போலி கால் சென்டர் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நடத்தி வந்த சசிகலா பொன்செல்வி (34) கைது செய்யப்பட்டார். அங்கு சுமார் 15 பெண்கள் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சோதனையில் 42 சிம்கார்டுகள், 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓராண்டு காலத்துக்கும் மேல் இந்த போலி கால் சென்டர் இயங்கி வருவதாகவும் ரூ.2.3 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணத்தில் பல வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், சொகுசு கார் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கால் சென்டரில் பணியாற்றும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், சென்னையில் இயங்கி வரும் போலி கால்சென்டர்கள் குறித்து தமிழக காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பலரும் புகார் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.