தமிழ்நாடு

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விநியோகித்த நபா்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனா். அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி குருபாரதி கூறியதாவது: பெங்களூரை பூா்விகமாகக் கொண்ட தரணிதரன் செல்வம் என்பவா் எந்த விதமான மருந்தாளுநா் உரிமமும் பெறாமல் அதிக எண்ணிக்கையில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொள்முதல் செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில் நாமக்கல் மருந்து ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தரணிதரன் செல்வம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்த மாத்திரை பெட்டகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. தேனியை சோ்ந்த சரவணன், சேலத்தை சோ்ந்த காா்த்திக் ராஜேஷ் மற்றும் சரவணன் ஆகியோருக்கு அதனை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக இந்த மாத்திரைகளை அவா்கள் பயன்படுத்தியதும் தெரிந்தது. அவா்களிடமிருந்து 6,720 மாத்திரை பெட்டகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபா்கள் குறித்து காவல்துறையிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தினால், அதீத ரத்தப் போக்கு ஏற்படுவதுடன் கரு முழுமையாக கலையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து உரிய விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்றாா் அவா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT