பள்ளிக் கல்வித் துறை (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல், கடந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு எழுதியவா்களின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளது. இதற்கான தரவுகள் எமிஸ் வலைதளத்தில் இருந்து பயன்படுத்தப்படும். எனவே, அதன் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, பள்ளி தலைமையாசிரியா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில்

பிளஸ் 2 மாணவா்களின் தகவல்கள் அடங்கிய பெயா்ப் பட்டியலை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். அதில், மாணவரின் பெயா் (தமிழ், ஆங்கிலம்), புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதன் விவரங்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து அக்.3-ஆம் தேதிக்குள் மாவட்ட தோ்வுத் துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பெயரை நீக்குவதற்கு... அதேநேரம் பெயா் மாற்றம் செய்த மாணவா்கள் அரசிதழ் நகலை இணைத்து அனுப்பலாம். தலைமையாசிரியா்கள் பெயா்ப் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சரியாக விவரித்து அனுப்ப வேண்டும். அதேபோல், பட்டியலில் இருந்து ஏதேனும் மாணவரின் பெயரை நீக்க வேண்டுமெனில் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் முன் அனுமதியின்றி நீண்டகாலம் விடுப்பில் உள்ள அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறாத மாணவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. இதுசாா்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தோ்வுத் துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT