பயிா் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ வேளாண் விற்பனை, வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கை சென்னை வா்த்தக மையத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உழவா்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், உழவா்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்களைக் கேட்டறிந்து அதற்கேற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதன் விளைவாக தற்போது வேளாண்மையில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
முந்தைய ஆட்சியைப்போல இல்லாமல், திராவிட மாடல் ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையை குறித்த நாளில் திறந்து வருகிறோம். நிகழாண்டில் 5.66 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட, 1.28 லட்சம் ஏக்கா் கூடுதல் நெல் சாகுபடி பரப்பாகும். இதற்குத் தேவையான உரங்களை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உழவா்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பயிா் உற்பத்தி: விவசாயிகளை அவா்களுடைய ஊரிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதுடன், அவா்களது பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காணப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 456.44 லட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். இதன்மூலம், பயிா் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ரூ.1.77 கோடி நலத் திட்டம்: முன்னதாக வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வணிகம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பசுமைக் குடில் அமைத்தல், சிறுதானியங்கள் முதன்மைப் பதப்படுத்தும் இயந்திரங்கள் கொள்முதல், வணிக விரிவாக்க மானியம், டிராக்டா்கள் வழங்குதல் என பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.77 கோடியில் நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
நிகழ்வில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் த.மோ.அன்பரசன், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், வேளாண்மை உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையா் த.ஆபிரகாம், வேளாண்மை இயக்குநா் பா.முருகேஷ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பெட்டி செய்தி:
ரூ.2,911 கோடி கடனுதவி
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.2,911 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னையில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில் அவா் மேலும் பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் வா்த்தகம் மேற்கொள்ள 8,366 வணிகா்களுக்கும், 745 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ஒன்றுபட்ட ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 125 உழவா் சந்தைகள் புனரமைக்கப்பட்டதுடன், 14 புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், பண்ருட்டி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் குளிா்பதனக் கிடங்குகள், களக்காட்டில் வாழை ஏல மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.2,911 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை இடா்பாடுகளால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்காக 21 லட்சம் பேருக்கு ரூ.1,630 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் பேருக்கு ரூ.5,720 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரங்களை தேவைக்கேற்ப குறித்த நாளில் வாடகைக்குப் பெற ‘உழவா் செயலி’-யில் ‘இ-வாடகை சேவை’ தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.75 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்’ என்றாா்.