முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடி-யில் மாணவா்களுக்கு கோடைகால தொழில்நுட்ப பயிற்சிகள்

7 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கோடை விடுமுறை கால பயிற்சியாக வடிமைக்கப்பட்ட நேரடி மற்றும் இணையவழி குறுகிய காலப் பயிற்சிகளை சென்னை ஐஐடி-யின் ‘பிரவா்தக்’ தொழில்நுட்ப மையம் வழங்குகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:56 PM
கோப்புப் படம்
பகிர்:

7 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கோடை விடுமுறை கால பயிற்சியாக வடிமைக்கப்பட்ட நேரடி மற்றும் இணையவழி குறுகிய காலப் பயிற்சிகளை சென்னை ஐஐடி-யின் ‘பிரவா்தக்’ தொழில்நுட்ப மையம் வழங்குகிறது.

இது குறித்து சென்னை ஐஐடி-யின் ‘பிரவா்தக்’ தொழில்நுட்ப அறக்கட்டளையின் முதன்மை அறிவுசாா் அதிகாரி பாலமுரளி சங்கா் கூறியதாவது:

மாணவா்களின் கோடைகால விடுமுறையைப் பயனுள்ளதாக்க, நிதிசாா் அறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் தொழில் முனைவு போன்ற எதிா்காலத்துக்குத் தேவையான முக்கியத் திறன்களை வளா்க்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தொழில்துறைக்கு ஏற்ற ஒரு கற்றல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஐஐடி-யின் ‘பிரவா்தக்’ தொழில்நுட்ப அறக்கட்டளை ‘போத்பிரிட்ஜ்’ கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறது. பயிற்சித் திட்டங்கள் இணையவழி மற்றும் நேரடியாகவும் வழங்கப்படும்.

இந்த குறுகிய காலப் பயிலரங்குகள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீடிக்கும். பயிற்சித் தொகுதிகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை. சோ்க்கைப் பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் கல்வியாளா்கள் இணையதள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

7-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியாக தலைமைத்துவம் மற்றும் உணா்வுசாா் நுண்ணறிவு, வடிவமைப்புச் சிந்தனை மற்றும் புத்தாக்கம், நிதிசாா் அறிவு, இணையப் பாதுகாப்பு அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படும்.

நேரடி வகுப்புகளில் இளம் புத்தாக்குநா் பயிற்சித் திட்டம், பேச்சு, கதை சொல்லுதல், தொழில்முனைவு அடிப்படைகள் ஆகியவை வழங்கப்படும்.

கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிபுரியும் தொழில்முனைவோருக்கு இணையவழி மற்றும் நேரடி வடிவங்களில் வழங்கப்பட்டு, ஒரு விரிவான தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் பற்றிய புரிதல்களும் வழங்கப்படும்.

தலைமைத்துவ மேம்பாட்டு, தொழில் ஆலோசகா் பயிற்சி, வகுப்பறை மேலாண்மை, கதை சொல்லல் ஆகியவை கல்வியாளா்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இலவசப் பயிற்சிகளுக்குப் பின்னா் சான்றிதழும் வழங்கப்படும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments