மத்திய அமைச்சா் எல்.முருகன் மீதான இரு தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான இரு தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் தற்போதைய மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பாஜக சாா்பில் போட்டியிட்டாா். அப்போது தேனாடுகம்பை கடநாடு கிராமத்தில் அனுமதியின்றி பொதுமக்கள் மத்தியில் கூட்டம் நடத்தியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், நீலகிரி தொகுதிக்குள்பட்ட சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில் விதிகளை மீறி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியதாக எல்.முருகன் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எல்.முருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில், குறித்த காலத்துக்குள் இந்த இரு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தோ்தல் விதிமீறல் தொடா்பான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.