பாஜகவுடன் ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு: மமதாவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!
பாஜகவுடன் திமுக, காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு எனக் கூறிய மமதாவின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம்
பாஜகவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பாஜகவுடன் மறைமுக உடன்பாடு வைத்திருப்பதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி ஒரு தேர்தல் பிரசாரத்தில் விமா்சித்திருந்தார்.
5 மாநில தேர்தல் அறிவிப்பையடுத்து தோ்தல் பணிக்காக மேற்கு வங்கத்தில்தான் அதிகமாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Advertisement
இந்நிலையில் மமதாவின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மமதா பானர்ஜியின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். பாஜக எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும். எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைப்பது மமதா, சமநிலையை இழந்து பேசுவதைப்போல தோன்றுகிறது.
1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அல்ல, திரிணமூல் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும் 2004 தேர்தலில் ஆர்எஸ்எஸ் -பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதும் மறக்கக் கூடாது. உண்மைகள் இல்லாமல் கூட்டணி கூட்டாளிகளை குறிவைத்து, அமைப்புகளின் மீது சந்தேகம் எழுப்புவது தலைமைத் தன்மையல்ல — அது கவனச் சிதறலாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆர்எஸ்எஸ்-பாஜக கொள்கைக்கு எதிராக நின்று போராடி வருகிறார். அவர்மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன;
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; அவரது அரசு வீடும் காலி செய்யப்பட்டது ஆர்எஸ்எஸ்/ பாஜக எதிர்த்து நிற்பதற்கு அவர் செலுத்திய விலை இது.
பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு யாரிடமும் பாடம் தேவையில்லை. இது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கான நேரமல்ல. இது ஒற்றுமை, பொறுப்பு, மற்றும் நோக்கத்தில் தெளிவு கொண்டிருக்க வேண்டிய நேரம்" என்று பதிவிட்டுள்ளார்.