தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை(ஏப். 12) தமிழகம் வரவுள்ளதாகவும் நாளை மாலை தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.
Advertisement
ராகுல் காந்தி வருகை
இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் தமிழகம் வரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. கடந்த வாரம் புதுவை வந்த அவர், தமிழகத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தி நாளை(ஏப். 12,ஞாயிறு) தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை தில்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அப்பகுதியில் சாலை வலம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே மேடையில் ஸ்டாலினும் ராகுலும்...
பின்னர் தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை(ஏப். 12, ஞாயிறு) மாலை 4 மணிக்கு பரமக்குடியிலும் இரவு 7 மணிக்கு தூத்துக்குடியிலும் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணி தூத்துக்குடி பிரசாரத்தில் ராகுல் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
பின்னர் ஏப். 15, 16 தேதிகளிலும் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தமிழகம் வரவுள்ளனர்.
மோடி வருகை
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப். 15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் அவர், நாகர்கோவில் வேப்பமூடு - வடசேரி வரை சாலை வலம் நடத்துகிறார். பின்னர் ஏப். 18 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கோவை பொதுக் கூட்டப் பிரசாரத்தில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, ஏப். 13 ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். அதேபோல பாஜக தலைவர்கள் பலரும் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரவுள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 21 ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.